பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 'சுரக்ஷா' காப்புறுதி நிவாரணம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் (மண்சரிவு, வெள்ளம், சூறாவளி) காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து 2025.11.26 முதல் 2025.12.31 வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட உரிமைகோரல்கள் மட்டுமே இதன்கீழ் பரிசீலிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் நிவாரணங்கள் இயற்கை அனர்த்தம் காரணமாக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கு, வருமான வரம்பை கருத்திற் கொள்ளாமல் நன்மைகள் வழங்கப்படும் (அனர்த்தத்தினால் மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவசியம்).
காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளுக்காக பெறப்பட்ட வெளிக்கள சிகிச்சை, மருந்துகள் மற்றும் பரிசோதனைகளுக்காக அதிகபட்சம் ரூ. 20,000.00 வரை நன்மைகள் வழங்கப்படும்.
2025.11.01 முதல் 2025.11.26 வரை நிகழ்ந்த சம்பவங்களுக்கான காப்புறுதி கோரிக்கை ஆவணங்கள் அனர்த்தத்தினால் அழிவடைந்திருந்தால், அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையின் கீழ் நன்மைகள் வழங்கப்படும்.