நாளை முதல் போராட்டம் தீவிரம் - அரசை எச்சரிக்கும் GMOA
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை (02) முதல் மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 5 தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் வைத்தியர் பிரபாத் சுகதாச தெரிவித்துள்ளார்.
நாளை காலை 08.00 மணி முதல், மேலதிக நேர கடமைகளில் (Covering duties) இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் விலகவுள்ளனர்.
இதன் காரணமாக, அந்தந்த வைத்திய நிபுணர்கள் அவர்கள் இணைக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மாத்திரமே பணியாற்றுவார்கள்.
இதனால் நாடு முழுவதும் உள்ள 164 அலகுகளின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் இவ்வளவு பாரிய நெருக்கடி நிலவும் வேளையில், சுகாதார அமைச்சர் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவது வருத்தமளிப்பதாக வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டுள்ளார்.