தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் விரிசல்..?

தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் விரிசல்..?

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த நியமனம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் எவ்வித கலந்துரையாடலையும் கட்சி தலைமைகள் மேற்கொள்ளவில்லை என தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைவரும் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னாரில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பங்குகொள்ளவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற தெரிவு குறித்த தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியளித்தவாறு தேசிய பட்டியல் நியமனம் தராவிட்டால் அந்த கூட்;டணியிலுள்ள சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிக்குழுவாக நாடாளுமன்றில் அமர வேண்டிய நிலை ஏற்படும் என சிறுபான்மை கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டிருந்தார்.

தேசிய பட்டியல் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்றைய தினம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இதுவரை தெரிவு செய்துள்ளன.

எனினும் ஏனைய கட்சிகள் இதுவரை கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யவில்லை.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 17 தேசிய பட்டியல் உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 7 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி, எமது மக்கள் சக்தி இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியலுக்கு கடந்த 7 ஆம் திகதியே உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.

அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசன் நேற்று தெரிவு செய்யப்பட்டார்.

எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரரை கட்சி தீரமானித்துள்ளது.