வீதி விளக்குகளுக்கான கட்டணங்களை இனி மக்களே செலுத்த வேண்டும் ; தயாராகும் திட்டம்
உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்ததாவது: ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் வீதி விளக்குகளின் 'வோட்' அளவைக் கணக்கிட்டு, அத்தொகையை அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடையே பகிர்ந்து, அவர்களின் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்க முயற்சிக்கப்படுகிறது.

இவ்வாறு சேர்க்கப்படும் தொகையானது, பாவனையாளரின் மின்சாரக் கட்டணப் பெறுமதியில் 2.2% இற்கு மேற்படாத ஒரு தொகையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதி விளக்குகளைப் பராமரிக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் தற்போது பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகள் வசமே உள்ளது.
எனினும், புதிய யோசனையின் ஊடாக இந்த அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து நீக்கி, அதனை நிர்வகிக்கத் தனியானதொரு நிறுவனத்தை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.