
குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவை கைது செய்ய 4 குழுக்கள் நியமனம்
குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவை கைது செய்வதற்காக 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த ஐவரையும் நீதிமன்றத்தினூடாக பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் வலியுறுத்தியிருந்ததார்.
குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பாக இவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
மேலும் தொல்பொருள் கட்டளை சட்டம் மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருக்கும் இடத்திற்கு பொலிஸார் சென்றபோதிலும் அவர்கள் அனைவரும் அங்கு இருப்பதில்லை என குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவை கைது செய்வதற்காக 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.