தேங்காய் ஏற்றுமதி : இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

தேங்காய் ஏற்றுமதி : இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபை தரவுகளின் அடிப்படையில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

அதன்படி, தேங்காய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 1,033.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 43.83 சதவீத வளர்ச்சியாகும் என்று அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சையான தேங்காயை மட்டும் ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை அமைச்சு எடுத்துக்காட்டியுள்ளது.

தேங்காய் ஏற்றுமதி : இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் | Coconut Products Exports Surpass Usd 1 Billion

அத்துடன் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், தேங்காய் கிரீம், உலர்த்திய தேங்காய், செயற்படுத்தப்பட்ட கார்பன் மற்றும் தேங்காய் நார் கழிவு போன்ற பொருட்களுக்கு உலகளாவிய ரீதியில் அதிக தேவை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தேங்காய் சார்ந்த பொருட்கள் இப்போது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 7.2 சதவீதம் எனவும் எதிர்காலத்தில், இந்தத் துறை 2030 ஆம் ஆண்டுக்குள் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக, வடக்கு தென்னை முக்கோணம் நிறுவப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப கட்டத்தில் 16,000 ஏக்கர் உட்பட 36,000 ஏக்கர் புதிய தென்னை தோட்டங்களை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.