பரவும் போலி செய்திகள் - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பரவும் போலி செய்திகள் - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

தரகர்கள் உள்ளிட்டவர்களால் பரவும் போலியான செய்திகளுக்கு ஏமாறாமல் இருக்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் பணிகள் கடந்த தினம் தடைப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் தடைப்பட்டுள்ளதாக சில தரப்பினர் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பரவும் போலி செய்திகள் - பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Announcement From Department Of Motor Traffic

குறிப்பாக, தரகர்கள் (Brokers), இந்த சேவைகள் தடைபட்டுள்ளதாகவும் கூறி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவை பெறுவோரை தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வருவதாக தற்போது செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் புதிய வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருவதாகவும், வேரஹெர சாரதி அனுமதிப்பத்திரப் பிரிவின் பணிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய அனைத்து மாவட்ட அலுவலகங்களின் பணிகளும் தற்போது எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும், தரகர்கள் உள்ளிட்டவர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாறாமல் செயற்படுமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.