
நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நானுஓயா நகரில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்பியதால் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட், கிரிமிட்டி, கார்லிபேக் போன்ற பிரிவுகளில் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பலரின் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் பிரதேச மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இப்பகுதியிலுள்ள விவசாய நிலப்பரப்புகள் முற்றாக நீரினால் நிறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .