
மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருவதாகவும் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் மின் கட்டணம் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இது குறித்து மக்கள் கருத்துக் கோரல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை ஆணைக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே மின் கட்டணம் குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என்பதை தற்போது கூற முடியாது.