“என்னைத் தெரிவு செய்த அனைவருக்கும் நன்றி” தேர்தலுக்குப்பின் வெளியிட்ட அறிக்கை

“என்னைத் தெரிவு செய்த அனைவருக்கும் நன்றி” தேர்தலுக்குப்பின் வெளியிட்ட அறிக்கை

பாராளுமன்றத்துக்கு என்னைத் தெரிவுசெய்த வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள். உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பங்காளி கட்சிகளின் அர்ப்பணிப்பு, எமக்கிடையேயான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவை இல்லாமல் எனது இந்த வெற்றிசாத்தியம் ஆகியிருக்காது.

நாம் தொடர்ந்து கூட்டணியாகச் செயற்படவே எண்ணியுள்ளோம்.

இந்தக் கூட்டணியை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான நேர்மையான, ஊழல் அற்ற, தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோம்.

யாழ்ப்பாணத்தில் குறைந்தது நான்கு ஆசனங்களை நாம் எதிர்பார்த்தோம்.

அதேபோல, வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா குறைந்தது மூன்று ஆசனங்களை நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடைபெறவில்லை.

வடக்கு - கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு அழிக்கப்படக் கூடாது என்றும் தவறானவர்களை நீக்கி சரியானவர்களை தெரிவு செய்து கூட்டமைப்பு சரி செய்யப்பட வேண்டும் என்றும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் இன்று சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு தவறானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு பாரதூரமான நிலைமையினை உருவாக்கி இருக்கின்றது.

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது.

இதற்கு நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம். என்றார்.