
கல்வி அமைச்சு வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி
இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் (Nalaka Kaluwewe) கையொப்பத்துடன் இந்த பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டி அட்டவணை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை திகதிகளையும் குறிப்பிடுகின்றது.
அதற்கமைய புத்தாண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026 ஜனவரி 1ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பெப்ரவரி 14ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக தமிழ், சிங்கள பாடசாலைகள் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பமாவதுடன் முஸ்லிம் பாடசாலைகள் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.
தமிழ், சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவடைந்து பின்னர் விடுமுறை வழங்கப்படும்.
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறும்.
குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.