
அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள உறுதி!
மக்களுக்காக உழைக்கும் அரச ஊழியர்களை நாங்கள் பாதுகாப்போம். மேலும், தனியார் சேவை மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனேயே நாங்கள் சம்பள அதிகரிப்பை செய்தோம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் தனிநபர்களாகவன்றி, ஒரு தலைமையின் கீழ் ஒரு குழுவாக முன்னேறிச் செல்லும் ஒரு குழு. அதைத்தான் நாங்கள் அரச நிறுவனங்களுக்கும் சொல்கிறோம். அந்த நிறுவனங்களில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அரசியல் தலையீடு காரணமாக, முன்னேற முடியவில்லை.
இன்று, அவர்கள் ஒரு குழுவாக நாட்டிற்காக உழைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மக்களுக்காக சேவை செய்ய முன்வாருங்கள். மக்கள் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்ததைப் போலவே, அரசாங்க சேவையும் மோசடி மற்றும் ஊழலிலிருந்து விடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் இடமாக மாற வேண்டும்.
அரசாங்க சேவையில் அந்த மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கான ஊக்குவிப்பாகவே நாங்கள் சம்பளத்தை உயர்த்தினோம். மக்களுக்காக உழைக்கும் அரச ஊழியர்களை நாங்கள் பாதுகாப்போம். மேலும், தனியார் சேவை மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழிற் துறைகளை அமைக்கவும் வசதிகளை வழங்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தேவையான வரிக் கொள்கைகளை மாற்றவும் அரசாங்கம் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.