யாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

யாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான க.மகேசன் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு வாக்கெண்ணும் பெட்டிகள் வந்தடைந்த நிலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டவை வருமாறு;

“கடந்த வருட பாராளுமன்ற தேர்தலில் [2015 ] 59.8 வீதமும் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் 66.6 வீதமும் வாக்களிப்பு வீதம் இருந்த நிலையில் இவ்வருடம் 67.72 வீதம் யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு இடம்பெற்றமையை பார்க்கும் போது மிகவும் வெற்றிகரமாக அமைதியாக தேர்தலை நடாத்தியுள்ளோம் என்றே சொல்லவேண்டும்

தவிர 98 வீதம் தபால் மூல வாக்களிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக தேர்தல் ஆணைக்குழு, பொது சுகாதார பணியாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச அலுவலர்கள், உட்பட ஊடக துறையினரின் விழிப்புணர்வு பிரசாரமும் பெரும் பங்கு வகித்துள்ளது.

வாக்குப் பெட்டிகள் யாவும் சீல் வைக்கப் பட்டு பாதுகாக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. கட்சிகளின் முகவர்கள் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.  காலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகும். 8.00 மணியிலிருந்து ஏனைய பிரதேசங்களின் வாக்குகள் எண்ணப்படும். முதலாவது பெறுபேறு மதியவேளையில் 11.00 மணியளவில் வெளியிடப்படலாம் என்று நினைக்கின்றேன்”.

அத்துடன்  மாலை முழுமையாக மாவட்டத்தின் முடிவுகள் வெளிவரும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.