எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டியது அவசியம் – சீனா
இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண, இரு நாட்டுத் தலைவர்களும் செய்துகொண்ட உடன்படிக்கையை அமுல்படுத்த வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இந்திய, சீன இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி நிலையிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில், எல்லையில் அமைதியை ஏற்படுத்த தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தையை தொடருவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ‘கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்காக, இந்தியாவும் சீனாவும் தூதரக அதிகாரிகள் மூலமாகவும் இராணுவ அதிகாரிகள் மூலமாகவும் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த சந்திப்புகளின் முடிவில், இந்தியா, சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் ஏற்கெனவே செய்துகொண்ட உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள், மோதல் போக்காக மாறிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒருமித்த முடிவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே, எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்த முடியும்.
இரு தரப்புமே, எல்லையில் அமைதியை பின்பற்ற வேண்டும். பதற்றத்தை குறைத்து சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும். தற்போது, எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இரு தரப்புமே பேச்சை தொடர்வதற்கு தயாராக உள்ளன’ என அவர் தெரிவித்துள்ளார்.