
மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை
மாணவர்களை மண்டியிட வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் வகுப்பின் ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வருகைதருமாறு சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நேற்று (11.03.2025) அழைப்பு விடுத்த போதிலும், அவர் வருகைத்தரவில்லை என தெரியவந்துள்ளது.
அதன்படி, இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையைப் பெறுவதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக பலர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், அதன்படி, சந்தேக நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.