புல் ​அறுக்க சென்றவர் சடலமாக மீட்பு

புல் ​அறுக்க சென்றவர் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு 10ஆம் இலக்க தேயிலை மலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சடலமானது நேற்றிரவு (11.03.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்று காலை ஆட்டுக்கு புல் அறுக்க சென்றிருந்த நிலையில், இரவு ஏழு மணி வரை வீடு திரும்பவில்லை. பின்னர் தோட்ட மக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்ததை கண்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததோடு, தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 

பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 57வயதுடைய சிவனு பாக்கியநாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது . 

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.