யாழில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட மூன்று குடும்பங்கள்! காரணம் என்ன?
யாழ்ப்பாணம் - இணுவில், ஏழாலை பகுதியில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் தங்கிவிட்டு இந்தியா சென்ற புடவை வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்தே குறித்த வியாபாரி தொடர்பு வைத்திருந்த 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவர் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புடவை வியாபாரம் செய்வதற்காக வந்துள்ளார். பின்னர் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நபர் இலங்கையிலிருந்து இந்தியா சென்ற போது கொரோனா அறிகுறிகள் இல்லாமலேயே சென்றதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற போதும், அங்கிருந்து கப்பலுக்கு சென்றபோதும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. எனினும் இந்த தகவல் வெளியானதும் விரைந்து செயற்பட்ட சுகாதார அதிகாரிகள் அந்த நபர் குடியிருந்த இடத்திலும், தொடர்புகளை பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, இணுவிலில் அங்கலப்பாய், வேம்போலையைச் சேர்ந்த இரு குடும்பங்களும் ஏழாலையைச் சேர்ந்த ஒரு குடும்பமுமாக மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.