யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்! ஜனாதிபதியின் தீர்மானம்
யாழ்ப்பாணத்தில்(Jaffna) கடவுச்சீட்டு அலுவகமொன்றை திறப்பதற்கும் இன்னும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பிலும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான அலுவலகத்தையும் ஜனாதிபதி நேரடியாக பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“யாழ்.மாவட்டத்துக்கான அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்வதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் வகையிலும் ஜனாதிபதியின் யாழ். விஜயம் அமைந்திருந்தது.
அதன்படி யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகளை ஆராயும் வகையிலும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்தார்
இக்கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன, விஷேடமாக யாழ். மாவட்டத்தில் அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான நிதியினை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அத்துடன் கடற்றொழிற்துறை, விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. மண் அகழ்வு தொடர்பிலும் அதற்கெதிராக எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் யாழில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சட்ட விரோத மது பாவனை தொடர்பிலும் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இராணுவத்தின் வசமுள்ள காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு ஏதுவான தீர்மானங்களும் முடிவுகளும் கூட இதன்போது எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.