கருணாநிதி பிறந்தநாள் - ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கருணாநிதி பிறந்தநாள் - ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

 


இந்நிலையில், சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழைப் போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளான ஜூன் 3 அன்று அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி - வட்ட - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில்  கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான், கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும்  கலைஞரின் புகழ் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.