வெளியானது 2025 இடைக்கால வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீடு விபரங்கள்
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவு திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திலிருந்து அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்வதற்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 1,402 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.
அதன்போது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, அந்த தொகை 220.06 பில்லியன் ரூபாவாகும்.
மேலும், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 186.02 பில்லியன் ரூபா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 170.47 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 161.99 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 142.95 பில்லியன் ரூபா என இந்த இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 92 பில்லியன் ரூபா என்பதுடன், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 67.36 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளளது.