களனி பல்கலைக்கழக மாணவன் மரணம்: நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை
களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா (Nilanthi Renuka de Silva) தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் (Kelaniya University) வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தில் நான்காம் ஆண்டில் கணக்கியல் கற்கை நெறியில் கல்வி கற்கும் பிரின்ஸ் ராஜு பண்டார என்ற 24 வயதுடைய மாணவன் நேற்றையதினம் (23.10.2024) விடுதியின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் அதிகமாக மது அருந்தியதால் அறையின் ஜன்னல் பகுதியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பணிப்பாளரிடம் இருந்து விசாரணை அறிக்கை வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை இன்று (24) பெறப்படும் என்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக விடுதியில் மாணவரொருவரின் பிறந்தநாளுக்கு விருந்துபசாரம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாகவும் , விடுதியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாணவனின் மரணம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.