
போலியான அழைப்புக்களால் டிப்போ ஊழியர்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 9 டிப்போகளில் பணிபுரியும் ஊழியர்கள் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை புதுப்பிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாவை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி ஏமாற்றி இந்த நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களைச் சோதனையிட்ட போது அவை இறந்த நபர்கள் பயன்படுத்தியமை அல்லது சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் பயன்படுத்தியமை என தெரியவந்துள்ளது.
எனவே, இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.