திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து 500 மாணிக்கக் கற்கள் மற்றும் 100 வெள்ளி மோதிரங்கள் களவுபோயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

வெள்ளி மோதிரங்கள் மற்றும் தங்க நகைகளைத் தயாரிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

வர்த்தகர் கடந்த 11ஆம் திகதி திருகோணமலை பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்விற்குச் சென்று கடந்த 21 ஆம் திகதி மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, வீட்டிற்குள் இருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட வர்த்தகர் இது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

களவுபோன மாணிக்கக் கற்கள் அனைத்தும் 07 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்துள்ளதாகவும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல இலட்சம் ரூபா எனவும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.