மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் பலி
இரத்தினபுரி மாவட்டம், கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல - நோனாகல வீதியில் மல்வத்தைப் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று(27) இடம்பெற்றுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றுடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், தனியார் பேரூந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.