யாழ். கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02.07.2024) நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.
இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்திய வேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.