பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு!

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு செய்து இருந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து உமர் அக்மல் கூறுகையில், ‘எனக்கு முன்பு பல வீரர்கள் இதுபோல் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் என்னை போல் கடுமையான தண்டனை அளிக்கப்படவில்லை. எனது தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என்று மீண்டும் மேன்முறையீடு செய்வேன்’ என கூறினார்.

அணி நிர்வாகத்துடனான மோதல் போக்கு காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட உமர் அக்மல், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் போது, தன்னை சூதாட்டக் காரர்கள் அணுகியதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நாட்டு கிரிக்கெட் சபையின் விதிகளின் படி, இத்தகைய தரகர்கள் வீரர் ஒருவரை அணுகுவது குறித்து முறைப்படி தாமதமின்றி சம்பந்தப்பட்ட வீரர் தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும்.

அதற்கு விசாரணை எதுவும் இல்லாமல் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தடை குறைக்கப்பட்டுள்ளது.

29 வயதாகும் உமர் அக்மல், பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும், 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.