ஏலத்துக்கு வரவுள்ள பல வாகனங்கள்

ஏலத்துக்கு வரவுள்ள பல வாகனங்கள்

இலங்கையின் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்களை, ஏலம் விடுவதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூல விதிகளின்படி, குற்றங்களுக்காக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த வாகனங்கள் தொடர்பிலும், மூன்று மாதங்களுக்குள் நீதிபதியால் தீர்ப்பளிக்க முடியாவிட்டால், அந்த வாகனத்தை ஏலம் விடலாம். 

அந்த வாகனத்தை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் பணம் வங்கியொன்றில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையான வைப்புக் கணக்கில் வைப்பு செய்யப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏலத்துக்கு வரவுள்ள பல வாகனங்கள் | Vehicles At Courts And Police Stations To Auctionநீதிமன்ற வழக்கு முடிவடைந்து, வாகன உரிமையாளர் விடுவிக்கப்பட்டவுடன், அவர், தமது வங்கிக்கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட நிதியை திரட்டப்பட்ட வட்டியுடன் சேர்த்துப் பெற முடியும். 

எவ்வாறாயினும், வாகன உரிமையாளர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், வைப்பில் உள்ள நிதி அரசால் பறிமுதல் செய்யப்படும்.

பல பில்லியன் ரூபா பெறுமதியான ஆயிரக்கணக்கான வாகனங்கள் தற்போது நீதிமன்றங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் தேங்கி இருப்பதை கருத்திற்கொண்டே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது என்று நீதிமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில், நீதிமன்ற சாட்சியங்களுக்காக வைக்கப்படும் வாகனங்களை நிறுத்திவைக்க அரசாங்கம் பெரிய நிலங்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகளாக, பராமரிப்பு இல்லாததால், பழுதடையும் நிலை உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த சட்டமூலம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது.