சர்வதேச விமானப் போக்குவரத்துக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரொனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில், வணிகம், சுற்றுலா என அனைத்து துறைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவும் விமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அவற்றில், ஊழியர்கள் பணி நீக்கம், ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுப்பு, பணி நேரத்தை அதிகரித்தல், சம்பளமற்ற பணி வழங்குதல் என பல்வேறு அதிரடி முடிவுகளும் அடங்கும்.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முன்னரான நிலையை அடைய குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கு பின்பு தான் கொரோனாவுக்கு முந்தைய நிலையை சர்வதேச விமான போக்குவரத்து அடையும்.

முன்னதாக கடந்த மே மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்து 91 சதவிகிதம் குறைந்திருந்தது. அவை 86.5 என்ற அளவில் ஜூன் மாதம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஆனாலும் நிலைமை முழுவதும் சீரமைய குறைந்தது 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.