இரண்டாவது இன்னிங்ஸில் மே.தீவுகள் ஆரம்பமே தடுமாற்றம்: இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு!

இரண்டாவது இன்னிங்ஸில் மே.தீவுகள் ஆரம்பமே தடுமாற்றம்: இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய நேற்றைய ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், கிரைஜ் பிரத்வெயிட் 2 ஓட்டங்களுடனும், சாய் ஹோப் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஒப்பிடும் போது, மேற்கிந்திய தீவுகள் அணி 389 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
……..
கடந்த 24ஆம் திகதி மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 369 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஒல்லி போப் 91 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களையும், ஸ்டுவர்ட் பிரோட் 62 ஓட்டங்களையும், ரொறி பர்ன்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், கெப்ரியல் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேஸன் ஹோல்டர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 197 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ஹோல்டர் 46 ஓட்டங்களையும், டவ்ரிச் 37 ஓட்டங்களையும், ஜோன் கெம்பல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து 172 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி சார்பில், ரொறி பர்ன்ஸ் 90 ஓட்டங்களையும், டோமினிக் சிப்ளி 56 ஓட்டங்களையும், ஜோ ரூட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில், ஜேஸன் ஹோல்டர் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் எட்டு விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை இன்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரவுள்ளது.