மக்களின் உணவுத் தேவையைக் கூட தற்போதைய அரசாங்கம் நிவர்த்தி செய்யாது- ரணில்
இலங்கையில் தற்போதைய அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு ஆட்சியில் இருந்தால், மக்களால் உணவுத் தேவையைக் கூட நிவர்த்தி செய்துக் கொள்ள முடியாதுபோய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இன்று பொருளாதார சிக்கலில்தான் அனைவரும் உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பும் இல்லாது போயுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தினதும் விலை உயர்வடைந்துள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்களிலேயே இவ்வளவு சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு இருந்தால், தேசைக் கூட சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டு விடும்.
அரசாங்கத்துக்கு இன்று பணமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டும்தான் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க முடியும்.
இதற்கான தொடர்புகளும் எம்மிடமுள்ளன. நாம் நிச்சயமாக 6 ஆயிரம் மில்லியன் டொலரை நாட்டுக்கு கொண்டு வருவோம்.
இதனைக் கூறினால், எம்மை விமர்சிக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு தரப்பினர் இன்று தனியான ஒரு கட்சியை ஸ்தாபித்துள்ளார்கள்.
இது தனியான கட்சியொன்றே தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக்கட்சி கிடையாது என்பதை முதலில் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.