பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்!
மறைந்த பாடகியும், இசைஞானி இளையராஜாவின் புதல்வியுமான பவதாரிணிக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
”காற்றில் வரும் கீதமே” என பாடிய பவதாரிணி காற்றில் கீதமாய் கரைந்து விட்டார். 1976ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி இசைஞானி இளையராஜாவுக்கும் ஜீவா ராஜய்யாவுக்கும் மகளாக பிறந்தார்.
47 ஆண்டுகள் இந்த மண்ணில் இசையுடன் வாழ்ந்து வந்த பவதாரிணி ஜனவரி 25 மாலை 5.30 மணிக்கு இவ்வுலகை நீத்தார்.
இளையராஜா தனது மகள் பவதாரிணிக்கு கொல்லூரில் உள்ள மூகாம்பிகை திருக்கோயிலில் திருமணம் செய்து வைத்தார்.
ஆர். சபரிராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கடைசி வரை தனது மனைவிக்காக சபரி ராஜ் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலகளவில் தனது இசையால் பல கோடி மக்களை கட்டிப்போட்டு 80 வயதிலும் இசைக்கச்சேரிகளை நடத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் மகள் 47 வயதிலேயே புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் முதல் சிம்பு வரை தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து நேற்று மதியம் பவதாரிணியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பவதாரணியின் உடல் இன்று (27) தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தற்போது பவதாரணியின் உடல் தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பாராயணங்கள் ஓதப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை பவதாரணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.