அளவில்லாத பலன்களை அள்ளித்தரும் தைப்பூசத் திருநாள் இன்று!

அளவில்லாத பலன்களை அள்ளித்தரும் தைப்பூசத் திருநாள் இன்று!

முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டு, முருகனின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற நாட்களில் முக்கியமானது தைப்பூசத் திருநாளாகும்.

தைப்பூச திருவிழாவின் போது மட்டும், முருகனின் அறுபடைகளில் ஒன்றான பழனியில் 3 முதல் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

தைப்பூசத்தன்று முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தைப்பூசத் திருநாளன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் எண்ணிய சுபகாரியங்களனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சுப காரியங்கள் செய்ய தை மாதம் சிறப்பு மாதமாகும்.

பஞ்சபூதங்களும் இறைவனுக்குள் அடங்கும் என்பதை உணர்த்தும் நாளாக தைப்பூசம் விளங்குகிறது.

அதனால் இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஜோதிட ரீதியாக பூசம் நட்சத்திரம் என்பது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரமாகும். இது தை மாத பெளர்ணமி நாளுடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பினைப் பெறுகிறது.

முருகப் பெருமான் சிவ-சக்தி ஐக்கியமான ரூபமாக விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாயிற்று.


தைப்பூச பெருவிழா:

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்றுதான் தைப்பூசம்.

தைப்பூச விழா பழனி தலத்திற்குரிய விழாவாக கருதப்பட்டாலும், உலகம் முழுவதுமுள்ள அனைத்து முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

ஏராளமான பக்தர்கள் பால்குடமும் காவடியும் எடுத்து வலம் வந்து முருகப் பெருமானை இந்த நாளில் வழிபடுவார்கள்.

தை மாதத்தில் வரும் பெளர்ணமியுடன், பூசம் நட்சத்திரம் இணையும் நாளே தைப்பூசம் நாளாகும். தைப்பூசம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு புராண கதைகளும் சொல்லப்படுவதுண்டு.

தைப்பூசம் தோன்றிய வரலாறு:

முனிவர்களுக்கு பலவிதமான துன்பங்களைக் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை முருகன் இந்த நாளில் தான் வதம் செய்தார். முருகப் பெருமான் வள்ளி தேவியைத் திருமணம் செய்ததும், அன்னை பராசக்தியின் மொத்த சக்திகளையும் உள்ளடக்கிய சக்திவேலினை வாங்கியதும் இதே நாளில் தான்.

முருகப் பெருமானுக்கு, தான் அளித்த சாபத்தை நீக்குவதற்காக அவர் முன் தோன்றி பார்வதி தேவி காட்சி கொடுத்ததும் இதே தைப்பூச நாளில் தான் என புராணங்கள் கூறுகின்றன.

ஞான பண்டிதனான முருகப் பெருமான், தனது தந்தை ஈசனுக்கே பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசம் செய்ததும் இந்த நாளில் தான்.

வள்ளியை திருமணம் செய்ததால் ஊடல் கொண்ட தெய்வாணையை சமாதானம் செய்து வள்ளி-தெய்வாணை சமேதராக முருகப் பெருமான் காட்சி தந்ததும் தைப்பூச நாளில் தான் என கூறப்படுகிறது.

சிவனுக்குரிய நாளான தைப்பூசம்:

தைப்பூச திருநாளானது சிவன் மற்றும் பார்வதி தேவியுடன் தொடர்புடைய நாளாக கருதப்படுகிறது.

மார்கழி திருவாதிரையில் சிதம்பரத்தில் சிவபெருமான் தனித்து நடனம் ஆடியதை கண்ட பார்வதி தேவிக்கு தானும் இதே போல் ஆனந்த தாண்டவம் நிகழ்த்த வேண்டும் என ஆசைப்பட்டு, பராசக்தி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடியது இந்த தைப்பூச நாளில் தான்.

சிதம்பரத்தில் சிவன் - பார்வதி இருவரும் இணைந்து ஆனந்த நடனம் ஆடியதும் இந்த தைப்பூச திருநாளில்தான். முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழைக் கற்றுக் கொடுத்ததும் இதே தைப்பூச திருநாளில் தான் என கூறப்படுகிறது.

தைப்பூச நாளில் தான் நீர் உருவானதாகவும், அதிலிருந்து உலக உயிர்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது.