மீனவர்களின் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்
மீனவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ‘தீவர சுவ சவிய’ என்ற புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் வென்னப்புவ, வெல்லமங்கரய மீன்பிடித் துறைமுகத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மீனவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளிப்பதில் சவால்கள் இருக்கின்றன.
சில நேரங்களில் நோய்வாய்ப்பட்ட மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நடுக்கடலில் வெளிநாடுகளின் உதவியையும் பெற வேண்டிய தேவை ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலைமைகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு, மீனவ சமூகத்தின் ஆரோக்கியத்தையும் நலனையும் மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் மிகப் பாரிய திட்டமாக 'தீவர சுவ சவிய' வேலைத்திட்டம் அமையவுள்ளதாகவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மேலும் தெரிவித்தார்.