மனைவிக்கு வந்த அழைப்பால் விபரீதம்; கணவரை கைது செய்த பொலிஸார்!
தன்னுடைய மனைவியின் அலைபேசிக்கு வந்த அழைப்பை தொடர்பில் சந்தேகமடைந்த கணவன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மரக்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஉதானகம வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மனைவி, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் சேவையாற்றும் அந்தப் பெண், தன்னுடைய குழந்தைகளை பார்வையிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று முன் தினம் காலையில், சமையலறையில் உணவு சமைத்துக்கொண்டிருந்த போது, மனைவியின் அலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அது தொடர்பில் மனைவியிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியுடன் சண்டை போட்டு மரக்கறிகளை வெட்டும் கத்தியால் மனைவியின் முகம், நெஞ்சு மற்றும் கைகளை வெட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவனை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.