தேர்தலின் பின்னர் மீண்டும் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் - பிரதமர் உறுதி

தேர்தலின் பின்னர் மீண்டும் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் - பிரதமர் உறுதி

தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைய ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த நேரிட்டாலும் தேர்தல் முடிந்தவுடன் அந்த வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சேருவில பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் என்ன செய்தது என்று மக்கள் கேட்கின்றனர். ஐந்தாண்டுகளாக அவர்கள் நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அமைய இன பேதமின்றி நாட்டை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் சிலர் நாட்டுக்கு தேவைப்படுகின்றனர்.

எதிர்காலத்தில் ஆட்சியமைக்க உள்ள பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் கீழ் கமதொழிலை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கமத் தொழிலாளர்களின் ஓய்வூதியம், காப்புறுதி என்பவற்றை மேலும் வலுப்படுத்துவோம்.

திருகோணமலை என்பது எமது நாட்டின் பால் தேவையை 70 முதல் 80 வீதமம் வரை பூர்த்தி செய்யக் கூடிய மாவட்டம்.

இதனால், பிரதேசத்தில் பால் உற்பத்தியை மேம்படுத்த புதிய நவீன தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மாத்திரமின்றி புதிய மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கும் வேலைத்திட்டங்கள் தயாராக உள்ளன.

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு துரிதமாக புதிய முதலீட்டாளரை கண்டறிவோம். அல்லது அரச நிறுவனமாக அதனை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.