
நேற்றையதினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!
நாட்டில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 9 கைதிகளும், அங்கு தொற்று உறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும்.
பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்குமே கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கமைய, நட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 17 நோயாளர்கள் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 94 ஆக உயர்வடைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 659 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார, சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு மேற்கொள்ளும் அத்தியாவசிய பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக சுகாதார, சமூக, பாதுகாப்பு நிதியத்தின் மூலம் 36 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலை நேற்றைய தினம் மத்திய வங்கி ஆளுநர், கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ சபை தலைவர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மனினால், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.