சீன ஆயுதப்படைகளில் அங்கம் வகிப்பதாக விசா மோசடி செய்த சீனர்கள் அமெரிக்காவில் கைது!

சீன ஆயுதப்படைகளில் அங்கம் வகிப்பதாக விசா மோசடி செய்த சீனர்கள் அமெரிக்காவில் கைது!

சீனாவின் ஆயுதப் படைகளில் அங்கம் வகிப்பதென பொய்கூறி நான்கு சீனர்கள் விசா மோசடி செய்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் இருப்பதாகக் கூறப்படும் நான்காவது நபரைக் கைதுசெய்ய எஃப்.பி.ஐ. முயன்றுவரும் நிலையில் மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ விஞ்ஞானிகளை அமெரிக்காவிற்கு அனுப்பும் சீன திட்டத்தின் ஒரு பகுதியே இதுவென அமெரிக்க நீதித்துறை சட்டவாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (People’s Liberation Army) உறுப்பினர்கள் இராணுவத்துடனான தங்களது உண்மையான தொடர்பை மறைத்து ஆராய்ச்சி விசாக்களுக்கு விண்ணப்பித்ததாகவும் அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர் ஜோன் சி டெமர்ஸ் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவின் திறந்த சமுதாய நடைமுறைகளைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை அல்லது அறிவுத் தரவுகளை சுரண்டுவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தின் மற்றொரு பகுதியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனா – அமெரிக்கா  இடையில் பனிப்போர் ஒன்று உருவாகியுள்ள நிலையில் சீன விஞ்ஞானி ஒருவர் சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, ஹூஸ்டனில் சீனாவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்ட மறுநாளே, அறிவுசார் சொத்துக்களைத் திருடுவதில் ஈடுபட்டதாகக் கூறி இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் குற்றச்சாட்டு தீங்கிழைக்கும் அவதூறு என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மைக்காலமாக சீனாவுடன் சீற்றமான போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். வர்த்தகம், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ஹொங்கொங்கில் புதிய பாதுகாப்புச் சட்டம் என்பன இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.