மஹரகம நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக அபிவிருத்திசெய்ய நடவடிக்கை- மஹிந்த
மஹரகம நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது மஹரகம நகரம் ஆடைகள் தொடர்பான தொழிற்சாலைக்காக பிரபலமடைந்துள்ளது எனவும் இதனால் பிரதேசத்தின் வசதிகளை அதிகரித்து தேசிய, சர்வதேச மக்களுக்கு அவசியமான ஆடைகள் உட்பட ஏனைய பொருட்களைக் கொள்வனவு செய்யும் மத்திய நிலையமாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
கொழும்பு தலவத்துகொட பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் 5 வருடங்களில் நாடு முழுவதும் அபிவிருத்தித் திட்டங்களுடனான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து, தங்களுக்கான வீடுகளை உரிமையாக்கிக் கொள்வதற்காக தனியார் பிரிவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 69 இலட்சம் மக்கள் அனுமதி வழங்கிய சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.