வர்த்தமானி அறிவித்தலையும் மீறி தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்: கரு ஜயசூரிய கவலை

வர்த்தமானி அறிவித்தலையும் மீறி தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்: கரு ஜயசூரிய கவலை

வர்த்தமானி அறிவித்தலின்படி சுகாதார அணுகுமுறைகளுக்கு அமைவாக செயற்படாதவிடத்து அப்பாவி வாக்காளர்களின் உயிர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்திருக்கிறார்.

தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலையும் மீறி, முறையற்ற வகையில் பிரசாரக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வலுவற்ற சட்டங்கள் ஒருபோதும் பயனுடையதன்று. எனவே சுகாதார நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும்.

அவ்வாறல்லாவிடின் அப்பாவி வாக்காளர்களே அச்சுறுத்தலுக்கு இலக்காக நேரிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோன்று தேர்தல் பிரசாரங்களில் வழமைபோன்ற 'சேறுபூசும்' வகையிலான பேச்சுக்களும் நடவடிக்கைகளுமே அதிகளவில் காணப்படுகின்றன.

எனவே அனைத்து வாக்காளர்களும் தாம் ஆதரவளிக்கும் கட்சிகளிலிருந்து உண்மையான நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது கடமைகளைச் சரிவரச் செய்யக்கூடிய வேட்பாளர்களை மாத்திரம் தெரிவுசெய்ய வேண்டும்.

பொருத்தமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், அதன் விளைவு சீரற்ற நாடாளுமன்றத்தையே உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.