கேஜிஎப்' படத்தின் மூன்றாம் பாகமா பிரபாஸின் 'சலார்'..!
’கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎப் 2’ படத்தை இயக்கி உலக அளவில் புகழ்பெற்ற பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சலார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்று அதிகாலை டீசர் வெளியாகி உள்ளது.
கோம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் இந்த படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதிபாபு வில்லனாக நடித்துள்ளனர். ’கேஜிஎப்’ படத்தில் வருவது போன்ற காட்சிகள் இந்த படத்தின் டீசரில் இருப்பதால் இது ’கேஜிஎப்’ படத்தின் மூன்றாம் பாகமா? என்று எண்ண தோன்றுகிறது.
’கேஜிஎப்’ படத்தை போன்று அதே இருண்ட பின்னணி, புழுதி பறக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள், ஹீரோவுக்கான பில்டப் வசனங்கள் என டீசரில் இருப்பதை பார்க்கும் போது ’கேஜிஎப்’ படத்தின் தொடர்ச்சியா? என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் ஜுராசிக் பார்க், லயன், சீட்டா போன்ற பில்டப் வசனங்களுடன் பிரபாஸ் அறிமுகம் ஆகிறார். இந்த டீசரை வைத்து படத்தின் கதையை கணிக்க முடியவில்லை என்றாலும் ’கேஜிஎப்’ படத்திற்கும் இந்த படத்திற்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும் என்று மட்டும் கூற முடிகிறது.
‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு ’சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ மற்றும் ‘ஆதிபுருஷ்’ ஆகிய மூன்று தோல்வி படங்களை கொடுத்த பிரபாஸுக்கு இந்த படமாவது வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.