PHI அதிகாரிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சில் இன்று (புதன்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனவும் கலந்துகொள்ளவுள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள், கடந்த வௌ்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், கடந்த 19 ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.
இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரியவுக்கும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினருக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.