விதவைப் பெண்களை குறி வைத்த நபர்! கைது

விதவைப் பெண்களை குறி வைத்த நபர்! கைது

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வீடுகளுக்குச் சென்று, பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் மற்றொருவரின் ஒத்துழைப்புடனேயே இந்நபர் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 10,500 ரூபாய் பணம் மற்றும் தங்க மோதிரம் என்பவற்றை இவர்,மோசடியாகப் பெற்றுச் சென்றார்.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த கணவன்மார்களுக்கு இழப்பீடு கிடைக்கவுள்ளதாகக் கூறியே இவர் பல பெண்களை ஏமாற்றி பணம் அறவீடு செய்து வந்துள்ளார்.

போலி இலக்கத் தகட்டுடனான மோட்டார் சைக்கிளில் போவத்தை குளியாபிட்டி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு இவர் சென்று அங்கிருந்த வயோதிபப் பெண்ணிடம் 30 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

கேட்கப்பட்ட அவ்வளவு தொகை பணம் அப்பெண்ணிடம் இல்லாத காரணத்தினால் அப்போது 10,500 ரூபா பணத்துடன் மீதித் தொகைக்காக தங்க மோதிரத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக் காட்சிகள் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கெமராவில் பதிவாகியிருந்தன. அக்காட்சியை அடிப்படையாக வைத்து குறித்த சந்தேக நபரை, வீட்டில் மறைந்திருந்த நிலையில் பிங்கிரிய பொலிஸார் கைது செய்தனர்.