தொழில்களை இழந்த பெண்களுக்கு வழங்கப்படவுள்ள இழப்பீடு
பொதுத் தேர்தலின் பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக தொழில்களை இழந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெண்களுக்காக கொள்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற லக்வனிதா சங்கத்தின் விசேட சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
புதிய அறிக்கைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸின் அதிகமான பாதிப்புகள் பெண்களுக்கே ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல பெண்கள் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டுள்ளது. ஏற்கனவே அதிகமான பெண்கள் பணிப்புரியும் ஆடை உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுளளது.
மத்திய கிழக்கில் பெண்களுக்காக தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது. பல நிறுவனங்கள் நிரந்தரமாக்கப்படாத பெண்களை பணிகளில் இருந்து நீக்கியுள்ளன.
இதனால், இந்த நெருக்கடியான நிலைமையில் அதிகளவான பாதிப்புகளை பெண்களே எதிர்நோக்கி வருகின்றனர்.
கொரோனா தொற்று நோய் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியனவே நாடு எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சினைகள். பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய பின்னர் பெண்களின் பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும்.
10 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புகளை இழக்கலாம் என நாம் மதிப்பிட்டுள்ளோம். அவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாயை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தொழில் வாய்ப்புகளை இழந்த பெண்களுக்காக வேறு வருமான வழியை உருவாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
தொழில் வாய்ப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பெண்களுக்கு நாங்கள் இழப்பீடுகளை வழங்குவோம். இதுவே எங்கள் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.