வைத்தியர் முகைதீன் படுகொலை - மரணதண்டனை வழங்கிய நீதிபதி!
வவுனியாவில் மகப்பேற்று வைத்திய நிபுணர் முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி வவுனியா, கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மகப்பேற்று வைத்திய நிபுணரான முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்ற வைத்தியர் கடமை முடித்து மாலை 6.45 முதல் 7 மணி வரையான நேரத்தில் வீடு செல்ல தயாரான போது தனியார் வைத்தியசாலை வாயிலில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
நெடுமாறன் என அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்பவர் முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவருக்கு மரணத்தை விளைவித்தன் காரணமாக 296 பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய கொலை குற்ற வழக்காகும். இவ் வழக்கு இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மூலம் வழக்கு தொடுனருக்கு தொடுக்கப்பட்ட வழக்காகும். இதற்கு அமைய எதிரி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி குறித்த பத்திரத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மன்றில் தமிழ் மொழியில் எதிரிக்கு வாசித்து காட்டப்பட்டது.
இதனைக் கேட்ட எதிரி தான் சுற்றவாளி என மன்றில் கூறினார். இதற்கு அமைய யுரஸ்சபை இல்லாத விளக்கத்தை தெரிவு செய்து கோரினார். இதனை மன்று ஏற்று யுரஸ் சபை இல்லாத வழக்குக்கு உத்தரவிட்டது.
இதன்போது 20 சாட்சியங்கள் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அபிசா வைத்தியசாலை வைத்தியர், தாதியர், மருந்தாளர், பணியாளர் மற்றும் 7 வது சாட்சியமும், 19 வது சாட்சியமும் இந்த வழக்கின் திருப்பு முனையாக அமைந்தது.
7 ஆவது சாட்சியாக இரசாயன பகுப்பாய்வாளர் சட்டவைத்திய அதிகாரி மடவல என்பவரின் சாட்சியும், தடவியல் ஆய்வு கூட அறிக்கை படியும் நெடுமாறன் என்பவரின் 1100 என்ற இலக்கமுடைய துப்பாக்கியில் இருந்து சுடப்பட்ட 4 தோட்டாக்கள் தான் தான் குறித்த வைத்தியரின் உடலை தாக்கியது என்பதை மன்றில் தெரிவித்தார்.
19 வது சாட்சியாக வவுனியா, மருகாரம்பளை பகுதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வீதி தடை சோதனையில் ஈடுபட்டிருந்த கொடக தெனிய கெதர என்ற இராணுவ வீரர் சாட்சியமளிக்கையில், குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவ் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் 10 மேற்பட்ட நபர்களால் விற்பனைகாக கொண்டு செல்லப்பட்ட இருப்பு, தகரங்கள் இறக்கி ஏற்றப்பட்டது. இதற்கான அனுமதிப பத்திரத்தை சோதனை செய்த போது அவர்களிடம் அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை. அவர்களிடம் கைதுப்பாக்கி ஏதாவது இருகின்றதா என வினாவினேன். இராணுவத்தினரின் சாதாரண சோதனை இடுப்பு பகுதியை சோதனையிடுவதாகும். அந்த வகையில் பழனிமுத்து சிவராசா என்பவரின் இடுப்பு பகுதியில் இருந்து பிஸ்ரல் ஒன்று மீட்கப்பட்டது. அதன்போது நெடுமாறன் என்பவரும் தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக 1100 என்ற இலக்கமுடைய பிஸ்ரலை இராணுவத்தினரிடம் காண்பித்தார் என மன்றில் தெரிவித்தார்.
அத்துடன், இதே நீதிமன்றில் பிறிதொரு வழக்கில் குறித்த எதிரியான நெடுமாறனின் உடமையில் இருந்து பெறப்பட்டது 1100 என்ற இலக்கமுடைய துப்பாக்கி தான் என இராணுவ வீரர் அடையாளம் காட்டியிருந்தார்.
இதனடிப்படையில் மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது. இதன்போது, 7 ஆம் 19 ஆம் சாட்சிகளின் அடிப்படையிலும், பகுப்பாய்வு திணைக்கள அதிகாரியின் சாட்சியங்களின் படியும், சந்தர்ப்பம், சூழ்நிலைகளின் படி சங்கிலி கோர்வையாக ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகக் கூடிய சந்தர்ப்பங்களின் அடிப்படையில் வழக்கு தொடுனர்களான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் என்பவர்களால் சந்தேகத்திற்கு அப்பால் எதிரி தான் குற்றத்தை புரிந்துள்ளார் என நிரூபித்துள்ளார்கள். இதற்கு அமைய எதிரிக்கு மரணதண்டனை வழங்கி மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.