மாணவியை வன்புணர முயற்சி -சாதாரணதரபரீட்சைக்கு தோற்ற முடியாத துயரம்...
தமது வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த இனந்தெரியாத நபரொருவர், பாலியல் வன்புணர முயற்சித்த சம்பவமொன்று நிட்டம்புவையில் இடம்பெற்றுள்ளது.
குளித்துவிட்டு அந்த மாணவி, இரவு 11 மணியளவிலேயே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது மாணவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற சமயம் மாணவி அலறியுள்ளார். மகளின் அலறல்சத்தம் கேட்டவுடன் அவரது தாயார் ஓடி வந்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் தப்பியோடி விட்டார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, அம்மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், நடைபெற்றுக்கொண்டிருக்கும் சாதாரண தரப் பரீட்சையில் இன்றைய (07) பரீட்சைக்கு அந்த மாணவியால் தோற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை அடையாளம் கண்டு கொண்ட தாயும் மகளும் அவர் தொடர்பிலும் சம்பவம் தொடர்பிலும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நிட்டம்புவ தலைமையக காவல் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பணியக அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்யும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.