மதுவும், மறுவாழ்வும்...

மதுவும், மறுவாழ்வும்...

குடி பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்து விடுகிறது.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னால் குடி நோயாளி என்ற வார்த்தை அதிகம் கேள்விப்பட்டிராத ஒன்று. பொதுவாக நோய் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதுதான் வழக்கம். ஆனால் குடி நோயாளியை பொறுத்தவரை நோயாளிகளுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் சேர்த்தே மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

குடி பழக்கம் தனி மனிதனின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்து விடுகிறது. மது பழக்கத்தால் குடும்ப வன்முறைகளும் விவாகரத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இப்போது மிக இளம் வயதிலேயே பலர் மது பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது வேதனை தருகிறது. சிகிச்சைக்காக தந்தையும் மகனுமாக வருகிற சமூக அவலம் ஏற்பட்டுள்ளது, என்கிறார்கள் மருத்துவர்கள்.

 


இப்போது எங்கு பார்த்தாலும் எளிதில் மது கிடைத்து விடுகிறது. அதுவும் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மது அருந்த முடிகிறது. இவை இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்தாலே, மக்களை ஓரளவுக்கு மதுவின் பிடியில் இருந்து மீட்கலாம். குடி நோய் என்பது தீர்க்ககூடியதுதான். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் மகிழ்ச்சியான மறுவாழ்வு உண்டு.

யார் குடி நோயாளி? என கேட்கலாம்.

மது குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பவர்கள், குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றை அனுபவிப்பவர்கள், குடியின் அளவைக் குறைக்கவோ, இடைவெளியை அதிகரிக்கவோ முடியாமல் இருப்பவர்கள், அதிக அளவு குடித்தால்தான் போதும் என்ற நிலையில் உள்ளவர்கள், குடித்த பிறகு நடந்த சம்பவங்களை மறந்துவிடுவது, குடிப்பதற்காகவே காரணங்களை தேடுவது, காரணமின்றி மனைவியின் நடத்தையையோ, நெருங்கியவர்களின் செயல்பாட்டையோ சந்தேகிப்பது, குடித்தால்தான் வேலைசெய்ய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களை குடி நோயாளிகள் என்கிறார்கள், மருத்துவர்கள்.