சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் -ஜனாதிபதி

சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் -ஜனாதிபதி

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்காக நாட்டில் சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (15) இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளோம்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும். எமது நாட்டுக்கு நல்லிணக்கம் அவசியமானது.

30-40 வருடங்களுக்கு மேலாக யுத்தம், மோதல்கள்.குழப்பங்கள் மற்றும் பிரிவினைவாத, இனவாத வங்குரோத்து அரசியல்களினால் நாடு பிரிந்திருந்தது.

நாம் ஒரே நாட்டில் வாழ வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும்.

அதற்காக 75 வருடங்களுக்கு முன்னர் டி.எஸ்.சேனாநாயக்க உருவாக்கிய தனித்துவமான இலங்கையை நோக்கி பயணிக்க வேண்டும்.

நாடாளுமன்றில் உள்ள தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறேன்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி பெப்ரவரி மாதம் வெளியிட வேண்டும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றிற்கு அறிவிக்கிறேன். அடுத்த வாரம் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறேன்.

இந்தப் பிரச்சினைகளை ஒதுக்கியோ காலங்கடத்தியோ தீர்க்க முடியாது. தீர்வு என்ன என்பதை நாடாளுமன்றிற்கும் நாட்டிற்கும் வெளியிட வேண்டும்.

பல பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும்.

உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த ஆணைக்குழுவை அமைப்பது குறித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தின் கருத்தை வினவியிருந்தேன்.

உண்மையை கன்டறிவதை நாமும் விரும்புகிறோம். அதன் மூலம் எம்மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

எனவே உண்மையை கன்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை உருவாக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதேபோன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம்.

வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர்.

நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.