2.95 டிரில்லியன் வருமானம்: முதல் அரையாண்டில் அரசு பெற்ற பிரம்மாண்ட வெற்றி!

2.95 டிரில்லியன் வருமானம்: முதல் அரையாண்டில் அரசு பெற்ற பிரம்மாண்ட வெற்றி!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஜனவரி-ஜூன் அரச நிதி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்த நிலையில், இம்முறை உபரி பதிவாவதற்கு அரசாங்க வருமானம் 27 சதவீதத்தால் அதிகரித்தமையும் அரசாங்கச் செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே பிரதான காரணங்களாகும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

2026 இன் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 2,710.6 பில்லியன் ரூபா வரை, அதாவது 2.71 டிரில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீத வளர்ச்சியாகும்.

 

வருடாந்த வரி வருமான இலக்கு 4.91 டிரில்லியன் ரூபாவாகும் என்பதுடன், முதல் ஆறு மாதங்களில் அதில் 55.2 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளது.

 

வரி வருமானத்தில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அவ்வமைப்பினால் 1,290 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 48 சதவீதமாகும்.

 

இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து கிடைத்துள்ளதுடன், அதன் மூலம் 1,248 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 46 சதவீதமாகும்.

 

மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருமான வழிகளிலிருந்து 35 பில்லியன் ரூபா திரட்டப்பட்டுள்ளது.

 

சுங்க வருமானத்தில் பிரதான வருமான மூலமாக இறக்குமதி மீதான பெறமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) அமைந்திருந்ததுடன், அதன் மூலம் 443.7 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 354 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத வளர்ச்சியாகும்.

 

மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட வரியிலிருந்து கிடைத்த வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், அது 129.1 பில்லியன் ரூபாவிலிருந்து 266.4 பில்லியன் ரூபா வரை, அதாவது 106.5 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

 

சுங்கத்தினால் திரட்டப்படும் மொத்த வரி வருமானத்தில் 63 சதவீதம் மோட்டார் வாகன இறக்குமதி மீதான வரியிலிருந்தே கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் திரட்டப்பட்ட வருமானங்களில் வருமான வரி முதன்மை இடம் பெற்றுள்ளதுடன், அதன் மூலம் 568.4 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத அதிகரிப்பாகும்.

 

நிறுவன வருமான வரி 26 சதவீதத்தாலும், தனிநபர் வருமான வரி 15 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளன. மேலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீதான VAT வருமானம் 26 சதவீதத்தாலும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 15 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

 

இதனிடையே, மதுவரித் திணைக்களத்தின் மதுபானங்கள் மீதான மதுவரி வருமானம் 27 சதவீதத்தால் அதிகரித்து 137.5 பில்லியன் ரூபா வரை வளர்ச்சியடைந்துள்ளது.

 

வரி வருமானத்திற்கு புறம்பாக, வரி அல்லாத வருமானமும் 43.6 சதவீதத்தால் அதிகரித்து 243.6 பில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ளதுடன், மொத்த அரசாங்கச் செலவினம் 7.9 சதவீதத்தால் அதிகரித்து சுமார் 2.95 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.

 

மீளுறும் செலவினங்கள் 6.5 சதவீதத்தாலும், மூலதனச் செலவினங்கள் 23.6 சதவீதத்தாலும் அதிகரித்துள்ள அதேவேளை, வட்டிச் செலுத்தல்கள் 2 சதவீதத்தால் குறைவடைந்து 1,234.6 பில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளது.

 

மேலும், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 4.7 சதவீத வளர்ச்சியை விட அதிகமான மதிப்பு என்றும் அரச நிதி ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.