பூமில இருந்து உருவாகும் வினோத சத்தம்? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆடியோ.. பரபரப்பு பின்னணி..!

பூமில இருந்து உருவாகும் வினோத சத்தம்? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆடியோ.. பரபரப்பு பின்னணி..!

விண்வெளி எப்போதுமே பல்வேறு விடை காணமுடியாத விசித்திரங்களை தன்னிடத்தே கொண்டது. நாள்தோறும் பல்வேறு விதமான புதிய புதிய தகவல்கள் விண்வெளி பற்றி வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமை (European Space Agency - ESA) தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, பூமியின் காந்த புலத்தின் சத்தத்தை வெளியிட்டிருக்கிறார்கள் ESA -வை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் நம்மால் பூமியின் காந்த புலத்தை பார்க்க முடியாது. அதேபோல, அவற்றிற்கு என சத்தம் ஏதுமில்லை. இவை காஸ்மிக் ரேடியேஷனில் இருந்து பூமியை பாதுகாக்கும் வேலையை செய்து வருகின்றன. பொதுவாக சூரியனில் இருந்து வரும் solar flares எனப்படும் அலைகளில் இருந்து இந்த காந்தப் புலம் பூமியை காக்கின்றன.

Unique Sound Of Earth Magnetic Field Released By ESA

 

காந்தப் புலத்தை ஆய்வு செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ESA-வின் ஸ்வர்ம் செயற்கைக்கோள் பூமியை சுற்றியுள்ள காந்தப் புலத்தை அளவிட்டு வருகிறது. இந்நிலையில், டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த காந்த சமிக்ஞைகளை ஒலி வடிவமாக மாற்றியிருக்கிறார்களாம். முதன்முதலாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி இந்த சத்தத்தினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

பூமியின் மையப்பகுதி, மேன்டில், மேலோடு மற்றும் பெருங்கடல்களில் இருந்து உருவாகும் காந்த சமிக்ஞைகளை துல்லியமாக அளவிடுவதன் மூலம் காந்தப்புலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள ஸ்வர்ம் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி முகமை அதில்,"ஹேப்பி ஹாலோவீன். நாங்கள் ஸ்வர்ம் செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட பூமியின் காந்த புலத்தின் அச்சமூட்டும் சத்தத்துடன் ஹாலோவீனை கொண்டாடுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. அதனுடன் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோவையும் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.