சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நேற்று (17) நள்ளிரவு முதல் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலை காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
விதிகளை மீறும் தரப்பினர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.